சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கழிவால் நோய் தொற்று அபாயம்
கொரட்டூர், அக். 30-- அம்பத்துார் மண்டலம், 84வது வார்டு, வீட்டு வசதி வாரியம், வடக்கு அவென்யூ பகுதியில் 9 மீட்டர் அகலத்தில் உபரி நீர் கால்வாய் அமைந்துள்ளது. அம்பத்துார் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டையின் ரசாயன கழிவு போன்றவை, இந்த கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, அம்பத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நீரோட்டத்தை அதிகரிக்க, கழிவை அகற்றி துார் வாரும் பணியை, சென்னை மாநகராட்சியினர் இரண்டு நாட்களுக்கு முன் மேற்கொண்டனர். அப்போது, கால்வாயிலிருந்து வெளியேற்றபட்ட கழிவு, வடக்கு அவென்யூ சாலையோரம் கொட்டப்பட்டது. சாலையோரம் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகள், கடந்த இரண்டு நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. அவற்றில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், தோல் நோய் உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலனை கருத்தில் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.