உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதகு இல்லாத வடிகால்வாய் கடல் நீர் உட்புகும் அபாயம்

மதகு இல்லாத வடிகால்வாய் கடல் நீர் உட்புகும் அபாயம்

எண்ணுார்: மதகு இல்லாத பாரதியார் நகர் இணைப்பு வடிகால்வாய் வழியாக, கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது என, அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர். எண்ணுார், நேதாஜி நகர், சுனாமி குடியிருப்பு, பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரானது, பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் சந்திப்பு அருகே சென்றடைந்து, அங்கிருந்து கால்வாய் வழியாக கடலுக்கு செல்லும். அந்த பாதை துார்ந்து போன நிலையில், கனமழையின்போது, பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் சந்திப்பு - எண்ணுார் விரைவு சாலையில், 100 அடி துாரத்திற்கு, மழைநீர் வெள்ளம் போல் தேங்கி போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படும். தீர்வாக, 300 ஏக்கர் குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீர், பாரதியார் நகர் கடற்கரை வழியாக கடலுக்கு கடத்த, வடிகால் அமைக்க வேண்டும் என, முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம் மண்டல குழு கூட்டம், மன்ற கூட்டத்தில் தொடர் கோரிக்கை வைத்தார். அதன்படி, 1.50 கோடி ரூபாய் செலவில், கடற்கரை வழியாக மழைநீரை கடத்த, ராட்சத மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. பணி மந்தமாக நடந்து வந்த நிலையில், பருவமழைக்கு முன்பாகவே அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரி வந்தனர். ஆனால், பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. மாறாக, பருவமழையும் துவங்கியதால், அப்பணி அப்படியே கைவிடப்பட்டது. சில தினங்களுக்கு முன், பெய்த கனமழையின்போது, வடிகால் வழியாக கட்டுப்பாடின்றி கடற்கரையில் வெளியேறிய மழைநீரால், சிறிய படகுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இது ஒருபுறமிருக்க, கடலுடன் இணையும் அனைத்து வடிகாலுக்கும், மதகுகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், பாரதியார் நகர் கடற்கரை வடிகாலுக்கு மட்டும் மதகு அமைக்கபடவில்லை. இதன் காரணமாக, புயல், கடல் சீற்றத்தின் போது, வடிகால் வழியாக கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, வடிகாலுக்கு மதகு அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ