10 ஆண்டுக்கு பின் சாலை புதுப்பிப்பு
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, மாடர்ன் பள்ளி சாலை 2 கி.மீ., நீளம், 40 அடி அகலம் கொண்டது.இந்த சாலையில், காசாகிராண்ட், ரேடியன்ஸ், பிரெஸ்டிஜ், பேங்கர் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த சாலையில், 1.4 கி.மீ., துாரம் வரை பிரச்னை இல்லை. இடையில், 850 மீட்டர் துாரம் சாலைக்கு, சிலர் உரிமை கொண்டாடி, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு செய்து வந்தனர்.இதை ஒட்டி, வலுவிழந்து ஆபத்தாக இருந்த ரெட்டைகேணிதாங்கல் ஏரியை மேம்படுத்தவிடாமல் தடுத்தனர்.இதனால், நவம்பர் மாத மழையில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. பின், போலீஸ் பாதுகாப்புடன் ஏரி கரை பலப்படுத்தப்பட்டது.மொத்தமுள்ள 1.4 கி.மீ., துார சாலையில், 850 மீட்டர் நீளம், 40 அடி அகல சாலை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கவிடவில்லை.இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியதுடன், அடிக்கடி விபத்துகள் அதிகரித்து, பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் சாலையை புதுப்பிக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 1.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், 850 மீட்டர் நீளம், 35 முதல் 40 அடி வரை அகலத்தில் தார் சாலை அமைத்து புதுப்பிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணி செய்தனர்.