சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
தாம்பரம்: தாம்பரம் சண்முகம் சாலையில், அதிகரித்து வந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் இன்று (நவ.,19) அகற்றினர். தாம்பரம் சண்முகம் சாலையில், மாநகராட்சியால் வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி, சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, ஏராளமான சிறு கடைகள் போடப்பட்டுள்ளன. அதேபோல், பெரிய கடைகாரர்களும், தங்கள் பங்கிற்கு ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இச்சாலையில் சாதாரண நாட்களிலேயே கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி, செயின் பறிப்பு, திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நடக்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, இன்று நடந்தது. ‘பொக்லைன்’ இயந்திரத்துடன் அதிகாரிகள் சென்றபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.