ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய ரவுடியின் துப்பாக்கி ஒப்படைப்பு
சென்னை,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ரவுடி அப்புவிடம் இருந்த துப்பாக்கியை, காசிமேடு காவல் நிலையத்தில், வழக்கறிஞர் ஒருவர் ஒப்படைத்தார்.சென்னை எண்ணுார் காசிகோவில் குப்பத்தை சேர்ந்தவர் ராகவன், 26; ரவுடி. அவர் மீது, இரு கொலைகள் உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. பிடிவாரன்ட் அடிப்படையில், அவரை இரு தினங்களுக்குமுன், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பழனிமுத்து, நேற்று முன்தினம் ரவுடி ராகவன் தன்னிடம் கொடுத்து இருந்ததாக, 7.65 எம்.எம்., ரக துப்பாக்கியை, காசிமேடு போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான, கோடம்பாக்கம் ரவுடி அப்புவும், ராகவனும் கூட்டாளிகள் என்பதும், அந்த துப்பாக்கி அப்புவுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவர் மீதும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியை காலதாமதமாக ஒப்படைத்தது குறித்தும், விசாரணை நடக்கிறது.