ராயப்பேட்டை - ஆர்.கே., சாலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு வெளியேறியது ராட்சத இயந்திரம்
சென்னை, ராயப்பேட்டை - ஆர்.கே., சாலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பணியை முடித்து நேற்று வெற்றிகரமாக வெளியேறியது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மொத்தம் 118 கி.மீ.,க்கு, மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன. இதில், 69 கி.மீ., சுரங்கப்பாதையில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் - சிப்காட் தடத்தில், 43.04 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைகிறது. இந்நிலையில், ராயப்பேட்டை நிலையத்தில் இருந்து, ஆர்.கே., சாலை இடையே, 910 மீட்டர் துாரம், 'பவானி' என பெயரிடப்பட்ட ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரம், பணியை முடித்து நேற்று வெளியேறியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, ரவிச்சந்திரன் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன திட்ட இயக்குநர் ஜெயராம் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் பீட்டர்ஸ் பாலம் ஆகியவற்றின் கீழும், ராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரிய கட்டடம் ஆகியவற்றை கடந்தும் வந்துள்ளது. சுரங்கப்பாதையின் மேற்பகுதியில், அதாவது மண்ணின் மேற்பரப்பிற்கும் சுரங்கப்பாதைக்கும் இடையே, எட்டு முதல் 14 மீட்டர் வரை துாரம் உள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், வண்டல் கலந்த மணல் மற்றும் களிமண் போன்ற புவியியல் அமைப்புகளை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட, மேலும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், தற்போது மந்தைவெளி பகுதியை வந்தடைந்துள்ளன. அவை, அடுத்த மாதத்துக்குள் பணியை நிறைவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.