உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆண்டுக்கு ரூ.20 கோடி வசூலித்தும் குடிநீர் இல்லை அலட்சியம்! 4 ஆண்டுகளாக காத்திருக்கும் மாதவரம் மண்டலம்

ஆண்டுக்கு ரூ.20 கோடி வசூலித்தும் குடிநீர் இல்லை அலட்சியம்! 4 ஆண்டுகளாக காத்திருக்கும் மாதவரம் மண்டலம்

மாதவரம், : மாதவரம் மண்டலத்தில், ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வரி வசூலித்தும், நான்கு ஆண்டுகளாக இப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னை, மாதவரம் மண்டலத்தில் உள்ள 11 வார்டுகளில், 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஆனால், மாதவரம், தணிகாசலம் நகர், சுவாமி ராமலிங்கம் காலனி 'ஏ, பி, சி' பிரிவுகளிலும், சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும், நான்கு ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு ஆண்டிற்கு, பொதுமக்களிடமிருந்து வரி மட்டும், 20 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால், தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால், வெளியே விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.மாதவரம் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க, கடந்த 2014ம் ஆண்டு, மாதவரம் புக்ராஜ் நகர், புழல் லட்சுமிபுரம், எம்.ஜி.ஆர்., நகர், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, 113 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டிய இப்பணி, துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாமை, ஒப்பந்ததாரர் பிரச்னை, ஆட்சி மாற்றம் என, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.இந்நிலையில், இந்தாண்டு ஜனவரியில், தணிகாசலம் நகர் உள்ளிட்ட அதே ஐந்து இடங்களில் தள்ளிப்போன பணிகளுக்கு, கூடுதலாக 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இதையடுத்தும் பணிகள் துவங்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதில், தணிகாசலம் நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மழைநீர் கால்வாய் பணிகள் முடியாததால், அது பயன்பாட்டிற்கு வரவில்லை.புழல் எம்.ஜிஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.தணிகாசலம் நகரில், மாநகராட்சி ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்தால் மட்டுமே, குடிநீர் குழாய்களை பதிக்க முடியும்.அம்பத்துார் ஏரி, பாடி ஏரி, பூம்புகார் நகர் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர், தணிகாசலம் நகரில் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக ஓடுகிறது.இந்த மழைநீர் கால்வாயைத் தான், தற்போது சீரமைத்து வருகின்றனர். இப்பணியும் பல ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது.இங்கு, ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன.தணிகாசலம் நகரை, மாதவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் கண்டுகொள்வதில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்கு குடிநீர் உள்ளிட்ட பல குறைகள் இருப்பதால், மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், எம்.எல்.ஏ., இப்பகுதியை புறக்கணிப்பதாக புகார் உள்ளது.மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்தால் மட்டுமே, அருகில் குடிநீர் குழாய்கள் பதித்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் நிலை உள்ளது. ராமலிங்கம் காலனி குடியிருப்போர் சங்கத் தலைவர் கே.வாசுதேவன் கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக, எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. கடந்த 2020ம் ஆண்டு முதல், தொடர்ந்து புகார் அளித்தும், முதல்வரிடம் மனு அளித்தும், இதுவரை பயனில்லை.குடிநீர் வாரியத்திற்கு, 2020ம் ஆண்டு முதல் கடிதம் வாயிலாக புகார் அனுப்பி வருகிறோம். ஒப்பந்ததாரர் காலதாமதம் செய்ததால், அதை ரத்து செய்து விட்டு, மறு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதே பதிலைத் தான் நான்கு ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.கால அவகாசம்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் முடிந்துள்ளன. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் வேலையை முடித்து விட்டு, குடிநீர் குழாய் பதித்து தருவதாகக் கூறியுள்ளனர். ஒன்றரை மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன்பின், பிரச்னை சீராகும்.சென்னை குடிநீர் வாரிய அதிகாரி,மாதவரம் மண்டலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை