முடிச்சூரில் ஆக்கிரமித்து விவசாயம் செய்த ரூ.8 கோடி குளம் புறம்போக்கு நிலம் மீட்பு
முடிச்சூர்: முடிச்சூரில், நீதிமன்ற உத்தரவுப்படி, நெல், வாழை விவசாயம் செய்து வந்த, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 சென்ட் குளம் புறம்போக்கு நிலத்தை, வருவாய் துறையினர் மீட்டு, கம்பி வேலி அமைத்தனர். தாம்பரம் சட்டசபை தொகுதி, முடிச்சூர் ஊராட்சி, 4வது வார்டில், ரங்கா நகர் குளம் உள்ளது. இக்குளத்தின் வடக்கு பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. குளத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில், நெல், வாழை பயிரிட்டு, சிலர் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, குளத்தின் வடக்கு பகுதியில், நெல், வாழை பயிரிட்டிருந்த 200 மீட்டர் துாரத்திற்கு, 15 அடி அகலம் உடைய 30 சென்ட் நிலத்தை, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மீட்ட வருவாய் துறையினர், சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரங்கா நகர் குளத்தை மேம்படுத்தும் போது, இந்த நிலத்தை பாதையாக மாற்றித்தர வேண்டும் என, தனிநபர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள குளம் புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன், 200 மீட்டர் நீளத்திற்கு, 15 அடி அகலம் கொண்ட, 30 சென்ட் நிலத்தை மீட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 8 கோடி ரூபாய். இந்த நிலம், சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் பயன்படுத்தி வந்தது, அரசு நிலம் தான். ஆனாலும், மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். முன்னறிவிப்பு இன்றி, நெல் மற்றும் வாழை மரங்கள் நடப்பட்டுள்ள நிலத்தில் இறங்கி, கம்பி வேலி அமைத்துள்ளனர். இதில், பயிர்கள் சேதமடைந்துவிட்டன. விவசாய நிலத்திற்கு செல்ல மாற்று பாதை இருந்தாலும், அதன் வழியாக நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்கள் செல்ல முடியாது. அதனால், இந்த நிலத்தை பாதையாக மாற்றித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.