உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போராட்ட தொழிலாளர்களுக்கு சாம்சங் தொழிற்சாலை நோட்டீஸ்

போராட்ட தொழிலாளர்களுக்கு சாம்சங் தொழிற்சாலை நோட்டீஸ்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும், 'சாம்சங்' தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்குள்ள தொழிலாளர்களில் ஒரு பிரிவினர், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் துவக்க முயற்சித்தனர். மாறாக, கட்சி சார்பற்ற குழு அமைக்க தொழிற்சாலை தரப்பில் முன் வந்தனர்.இதையடுத்து தொழிற்சங்கம் துவங்க திட்டமிட்டவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு தரப்பினர், வழக்கம் போல வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில், 12 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு, தொழிற்சாலையின் மனிதவள பிரிவில் இருந்து, நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த போராட்டம், தொழில் தகராறு சட்டத்திற்கு முரணானது. அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க முடியும். இருப்பினும், சட்டவிரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவோருக்கு, வரும் 23ம் தேதி முதல் அடையாள அட்டை முடக்கப்படும். பணிக்கு வர விரும்பும் ஊழியர்களை யாராவது தடுத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தாண்டிற்கான தீபாவளி போனஸ், ஊழியர்களின் வருகை பதிவிற்கு ஏற்ப வழங்கப்படும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, பணிக்கு ஆஜராகாத நாட்களுக்கு ஏற்ப பிடித்தம் செய்து வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு, 'தொழிலாளர்கள் எடுத்த கூட்டு முடிவின்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். தொழிலாளர்கள் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இ-மெயில் வாயிலாக பதில் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை