உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்வரங்களை நீட்டி விவரித்த சங்கீதா

ஸ்வரங்களை நீட்டி விவரித்த சங்கீதா

சிவனின் கருணையையும், அருளையும் பெறும் வகையில், கோபாலகிருஷ்ண பாரதியாரின் 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற கிருதி வாயிலாக, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பக்தியை பரப்பினார், கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் சங்கீதா சிவகுமார்.ராக ஆலாபனையில் துவங்கிய இக்கிருதியை, ரூபக தாளம், கற்பனை ஸ்வரங்கள் மற்றும் கோர்வைகள் வாயிலாக, அடுக்கடுக்காக அழகாய் கோர்த்தார்.பண்டைய காலங்களில், செவ்வழி பண்ணாக திகழ்ந்த, யதுகுல காம்போஜி ராகத்தை ஆலாபனையாக வழங்கி, 'காலை துாக்கி நின்றாடும்' என்ற மாரிமுத்து பிள்ளையின் கிருதியை, இனிமையான தன் குரல் வளத்தால் ரசிக்க வைத்தார்.சபையினர் அடுத்து என்ன என்பதுபோல் ஆர்வம் கொண்டிருக்க, பஹுதாரி ராகத்தால் அழகூட்டப்பட்ட 'ப்ரோவ பாரமா ரகு ராமா' என்ற மத்யாதி தாள கிருதியை விறுவிறுப்பாக அமைய பாடினார் சங்கீதா.அதை மனதிற்குள் இதமாக, வயலின் வாயிலாக அனுப்பினார் ஷிவானி. பஹுதாரி ராகத்தில், ஸ்வரங்கள் எவ்வாறெல்லாம் இருக்கும் என்பதை விவரித்து பாடினார்.அனைவராலும் விரும்பக்கூடிய கல்யாணி ராகத்தில், 'பஜரே ரே சித்த' எனும் முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியை, பிரதான உருப்படியாக எடுத்துக்கொண்டார். ராக ஆலாபனை வாயிலாக அனைவரையும் திருப்தி செய்ய, வயலின் இசையும் மெருகேற்றியது.ராக முத்திரையை மிஸ்ர சாபு தாளத்தில் இக்கிருதி வழங்க, நிரவல் பகுதியை 'தேவீம் ஸக்தி பீஜோத் பவ'யில் பாடினார். பின் கற்பனை ஸ்வரங்கள், குறப்பு ஸ்வரங்கள், சர்வலகு மற்றும் கோர்வை என தொடுத்து, சபையினருக்கு மாலையாக வழங்கினார்.டில்லி சாய்ராம் மிருதங்கமும், குருபிரசாத் கடமும் தனி ஆவர்த்தனம் போட்டியில் கலந்து கொண்டன. அவர்களின் வாசிப்புக்கு, சபையினர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். 'வெங்கடாசல நிலையம்' என்ற, சிந்துபைரவி ராக துக்கடாவை பாடி, இறுதியில் 'பஜரே பாண்டுரங்கா' என்ற பாடலுடன் சங்கீதா, தன் கச்சேரியை நிறைவு செய்தார்.- ரா.பிரியங்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி