மனநல பாதிப்பில் மீண்டோருக்கான ஸ்கார்ப் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, அண்ணா நகரில் உள்ள 'ஸ்கார்ப்' மருத்துவமனை மனநல சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பெயர் பெற்றது. மனநல பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மனநல சிகிச்சைக்கான அணுகலை வழங்குவதிலும் ஸ்கார்ப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் மனநல பாதிப்பில் இருந்து மீண்டோருக்கு நல்வாழ்க்கை உருவாக்கி தர வேண்டிய முயற்சியை, 'ஸ்கார்ப்' மருத்துவமனை மேற்கொண்டது.இதில் 22 நிறுவனங்கள் பங்கேற்றன; 500 பணியிடங்களுக்கான நேர்க்காணல் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நேர்காணல் முடிவில், 100 பேருக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முகாமிலேயே ஐந்து பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.இது குறித்து ஸ்கார்ப் நிறுவன இயக்குநர் டாக்டர் பத்மாவதி கூறுகையில், ''மனநலம் பாதிக்கப்பட்டு மீண்டோரை பணிக்கு அமர்த்திக்கொள்ள, பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவது உண்டு. ஆனால், அந்த தயக்கம் தேவையற்றது. அவர்கள் அனைவரும், இயல்பாக பணிகளை மேற்கொள்ள தகுதி படைத்தவர்களே. இதை நாங்களே, பல நிறுவனங்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்,'' என்றார்.இது தொடர்பாக, ஸ்கார்ப் நிறுவன இணை இயக்குநர் டாக்டர் மங்களா கூறுகையில், ''கே.வி.ஆர்., இன்பினிடி, கான் அகாடமி, செப்டோ, சூடியோ, ஜே.கே., சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற, நேர்காணல் செய்தனர். இதில் தேர்வானோருக்கு, மாதம் 15,000 முதல் 25,000 ரூபாய் வரை, சம்பளம் கிடைக்கக்கூடும். அவர்கள் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றும்,'' என்றார்.----------------------------------