உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் துறை இடத்திற்கே பாதுகாப்பு கேள்விக்குறி

காவல் துறை இடத்திற்கே பாதுகாப்பு கேள்விக்குறி

வேளச்சேரி;வேளச்சேரியில் காவல் துறைக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்பில் சிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளச்சேரி, நியூ காலனியில், காவல் துறைக்கு சொந்தமான, 8,500 சதுர அடி பரப்பு இடம் உள்ளது. இதில், 1960ம் ஆண்டு, காவல் ஆய்வாளர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன; சுற்றி காலி இடமும் உள்ளது. கட்டடம் மிகவும் சேதமடைந்து இருந்ததுடன், சாலை மட்டத்தைவிட தாழ்வாக மாறியது. இதனால், வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியதால், 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளர்கள் வீடுகளை காலி செய்தனர். அதன்பின், இந்த கட்டடத்தை யாரும் பயன்படுத்தவில்லை. மாறாக, பாதுகாப்பு இல்லாமல் கட்டடம் பாழடைந்தது. செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த இடத்தை மது அருந்த, கஞ்சா புகைக்க சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர். போலீசார் சிலர் கூறியதாவது: காவல் துறைக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்பில் சிக்கும் நிலை உள்ளது. அதற்கு முன், ஆக்கப்பூர்வமான தேவைக்கு பயன்படுத்த வேண்டும். அடையாறு காவல் மாவட்டத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் இணை கமிஷனர், கமிஷனரின் கீழ் பல்வேறு பிரிவுகள், இட நெருக்கடியில் செயல்படுகின்றன. இதில், ஏதாவது ஒரு பிரிவுக்கு, இந்த இடத்தை ஒதுக்கி முறையாக பயன்படுத்தலாம். போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. அதற்குமுன், அந்த இடத்தை சுற்றி வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி