சென்னை மலர் கண்காட்சிக்காக நீலகிரியில் தயாராகும் நாற்றுகள்
குன்னுார்,:சென்னை, செம்மொழி பூங்காவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, 2022ல் இருந்து தோட்டக்கலை துறை சார்பில், மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கொடைக்கானல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கொண்டு செல்லப்படும் மலர்கள், காட்சிப்படுத்தப்படுகிறது. இதன்படி, நான்காவது மலர் கண்காட்சி விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தோட்டக்கலை துறை சார்பில், நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுாரில் சிம்ஸ் பூங்கா, தோட்டக்கலை பண்ணை உட்பட பல்வேறு இடங்களிலும், மலர் நாற்றுகள் தயார் செய்யும் பணி துவங்கியது.காட்டேரி பூங்கா நர்சரியில், சால்வியா, டெல்பினியம் உள்ளிட்ட, 45,000 மலர் நாற்றுகள், தொட்டிகளில் தயார் செய்யும் பணிகள் துவங்கியது. தேதி அறிவித்த பின், இந்த மலர் தொட்டிகள், சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என, தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.