வடபழனி சாஸ்த்ரா பல்கலையில் மன நலன் அறிய கருத்தரங்கம்
வடபழனி : வடபழனி சாஸ்த்ரா பல்கலையில், 'மன நலனை புரிந்துகொள்வது' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. வடபழனி, கன்னிகாபுரத்தில் சாஸ்த்ரா பல்கலையின் சென்னை வளாகம் உள்ளது. இக்கல்லுாரி மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இணைந்து நடத்திய 'மன நலனை புரிந்துகொள்வது' என்ற தலைப்பில், ஒருநாள் கருத்தரங்கம், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடத்தின. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் நீதிபதி சுப்ரமணியம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 'ஸ்கிசோப்ரினியா' ஆராய்ச்சி அறக்கட்டளை துணை தலைவர் டாக்டர் தாரா, சாஸ்த்ரா பல்கலை இயக்குநர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சுப்ரமணியம் பேசியதாவது: தபால் துறை நிகழ்வு ஒன்றில் நான் பங்கேற்றபோது, அதன் தலைமை அஞ்சல் துறை தலைவர், அவரது தோழி பற்றி பேசினார். கல்லுாரி காலத்தில் அவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியதையும் அதில் தான் வெற்றி பெற்று பல கட்டங்களை தாண்டி அஞ்சல் துறை தலைவராக வந்துள்ளதை தெரிவித்தார். அதே தேர்வில் தோல்வி அடைந்த அவரது தோழி, வழக்கறிஞர், மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்துள்ளதையும் கூறினார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவராகவும், அவரது தோழி தோல்வியடைந்தவராகவும் இருந்தனர். தற்போது யார் தோல்வியடைந்தவர், யார் வெற்றி பெற்றவர். இன்று தோல்வியாக தெரிபவை, நாளைய வெற்றியாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.