உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை பாதுகாக்க மண்டல வாரியாக தனி அறைகள்; எலி சாப்பிடாமல் இருக்க நடவடிக்கை

பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை பாதுகாக்க மண்டல வாரியாக தனி அறைகள்; எலி சாப்பிடாமல் இருக்க நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை மண்டல வாரியாக வைப்பதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டதுடன், சுழற்சி முறையில் பாதுகாப்பிற்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 97 காவல் நிலையங்கள் உள்ளன. காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கென தனி அறை ஏதும் ஏற்படுத்தப்படவில்லை.இதனால் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களை வழக்கு விசாரணை முடியும்வரை கையாள்வதில் ஒவ்வொரு காவல் நிலையத்தை சேர்ந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.குறிப்பாக, 2020ல் சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.விசாரணையின்போது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.ஆனால், அதில் 11 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டதாக போலீசார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, போலீசாரால் 'குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை' எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.இந்த நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கென தனி அறை ஒதுக்கீடு செய்யவும், சுழற்சி முறையில் பாதுகாப்பிற்காக போலீசார் பணியமர்த்தவும் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.அதன்படி தற்போது, மண்டல வாரியாக போதைப் பொருள் வைப்பதற்கென தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பழைய கமிஷனர் அலுவலகத்தில் ஒரு அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது போல மற்ற மண்டலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் கொண்டு வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முறையாக எடை போட்டு அவற்றை பதிவு செய்த பின், ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க அனுமதிக்கப்படும்.வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வரும் போது, இங்கு இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை சம்பந்தப்பட்ட போலீசார் எடுத்துச் செல்வர் என, காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை