காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு
அய்யப்பன்தாங்கல்:அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ள காலி இடத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆயில்மில் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீரில், கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், நிலத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கும் படி பதில் கூறியுள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர் கேடை நீக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.