சாலையில் கொப்பளித்து வழிந்தோடிய கழிவுநீர் ஓ.எம்.ஆரில் 2 கி.மீ., ஸ்தம்பித்த போக்குவரத்து
அடையாறு, ஓ.எம்.ஆர்., திருவான்மியூர் அருகில், டைடல் பார்க் மற்றும் ராமானுஜம், எல்.நெட் வளாகத்தில், 120க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இங்கு, கார், பைக் என, தினமும், 2 லட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன.இதனால், டைடல் பார்க் சந்திப்பில், எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அங்கு மேம்பாலம் கட்டியும் நெரிசல் குறையவில்லை.மயிலாப்பூரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, 2,000 மி.மீ., குழாய் செல்கிறது. இந்த குழாய், ஓ.எம்.ஆரில் பதிக்கப்பட்டுள்ளது.டைடல் பார்க் சந்திப்பில் உள்ள ஐ.டி., நிறுவனங்களின் கழிவுநீர் இணைப்புகள், இந்த பிரதான குழாயில் இணைக்கப்பட்டுள்ளன. பத்து நாட்களாக, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் கழிவு நீரேற்று நிலையம் பழுதடைந்துள்ளது.இதனால், பெருமளவு கழிவுநீர் பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவில்லை. இதனால், ஓ.எம்.ஆரில் பதித்துள்ள குழாயில் நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது.குறுகலான பகுதியான அங்கு, கழிவுநீர் வழிந்தோடுவதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. இதனால், ஓ.எம்.ஆர்., திருவான்மியூர் எல்.பி., சாலை மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலைகளில், நேற்று 2 கி.மீ., துாரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.ஐ.டி., நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, லாரியில் அகற்றவோ அல்லது மாற்று பாதையில், குழாய் வழியாக கொண்டு செல்லவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஓ.எம்.ஆரில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள், மிகவும் பழமையானவை. அதில், கொள்ளளவை மீறி கழிவுநீர் செல்கிறது. இந்த குழாய் இணைப்புகள், மேம்பாலம், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக மாற்றி அமைக்கப்பட்டது.ஐ.டி., நிறுவனங்கள், கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சுத்திகரிப்பு இயந்திர கட்டமைப்பை, டம்மியாக வைத்துக்கொண்டு, கழிவுநீரை நேரடியாக குழாயில் விடுகின்றனர்.இதனால், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் நீரேற்று நிலையத்தில், அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. மத்திய கைலாஷ் முதல் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் வரை, 3 கி.மீ., துார பிரதான குழாயை அகற்றி, அதிக கொள்ளளவு கொண்ட புதிய குழாய் பதித்தால் தான், இதற்கு விடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகள், ஐ.டி., நிறுவனங்களிடம் பேசி, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீண்டும் சாலை உள்வாங்கும் அபாயம்
கடந்த மாதம், இதே போல் கழிவுநீர் அங்காங்கே வெளியேறியதால், டைடல் பார்க் சந்திப்பில் பள்ளம் விழுந்து, அதில் ஒரு கார் சிக்கியது. ஏற்கனவே, இந்திரா நகர் மற்றும் மத்திய கைலாஷ் சந்திப்பில், குழாயில் கழிவுநீர் கசிந்து, மண் அரிப்பு ஏற்பட்டு, பலமுறை சாலை உள்வாங்கியது.இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படுமோ என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் அச்சப்படுகின்றனர். இதுவரை நடந்த சாலை உள்வாங்கும் சம்பவங்களில், கார், பைக் சேதமடைந்துள்ளன.மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. உயிர் இழப்பு ஏற்பட்டால் தான் அதிகாரிகள் விழித்து கொள்வார்களா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.