புழல், ஆவடி மண்டலத்தில், செங்குன்றம், புழல், கிராண்ட்லைன், சோழவரம், பாடியநல்லுார், அலமாதி, வீராபுரம், கோவில் பதாகை, காட்டூர் பகுதிகளில், 26 மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் உள்ளன.ஒவ்வொரு அலுவலகத்திலும், மாதந்தோறும், 50 முதல் 100 வரையிலான, புதிய ஒருமுனை மின் இணைப்பு கோரி, நுகர்வோர் விண்ணப்பிக்கின்றனர். மேலும், அனைத்து பகுதியிலும் புது கட்டுமான பணிகளும் நடக்கின்றன.இந்த நிலையில், புது கட்டுமான பணி பயன்பாட்டிற்கான, 'டாரிப்-6' வகை, மின் இணைப்புக்காக, விண்ணப்பித்து கட்டணம் செலுத்துவோருக்கு, குறித்த நேரத்தில் புது மின் மீட்டர் கிடைப்பதில்லை.அதே போன்று, தீயில் எரிந்து அல்லது சேதமடைந்த மின் மீட்டரை மாற்ற விண்ணப்பித்து, நுகர்வோர் கட்டணம் செலுத்தினாலும், உரிய நாளில் மீட்டர் கிடைப்பதில்லை.மேலும், முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கும், ஒருமுனை அல்லது மும்முனை மின் இணைப்புக்கான புதிய மீட்டரும் கிடைப்பதில்லை.கடந்த டிசம்பர் மாதம் முதல், மேற்கண்ட பகுதிகளில் புதிய மின் மீட்டர் இருப்பு இல்லை. சேதமடைந்த மீட்டர்களும், கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் முதல் மாற்ற வழியின்றி உள்ளன.இந்த நிலையில், நுகர்வோர் வேறு வழியின்றி, மின் திருட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், கோடை காலம் துவங்கி விட்டதால், மின் பயன்பாடின்றி வசிக்க முடியாத நிலையில், மின் திருட்டு அதிகரித்து, அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.மீட்டர் மட்டுமின்றி, ஆங்காங்கே சேதமடைந்த பல மின் கம்பங்களும், புதிய மின் கம்பங்கள் இருப்பு இல்லாததால், அவற்றை மாற்ற வழியின்றி அபாய நிலையில் உள்ளன. இதனால், மக்கள் அச்சத்திற்கும், அவதிக்கும் ஆளாகின்றனர்.தேவையான மீட்டர், மின் கம்பம் உள்ளிட்ட முக்கிய மின் உபகரணங்கள், உதிரிபாகப் பொருட்கள் கிடைக்க, தமிழ்நாடு மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.