சாலையில் ஆயில் கசிவு விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,
ராயபுரம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர், 30; லாரி ஓட்டுநர். இவர், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து, டேங்கர் லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மேடவாக்கம் நோக்கி சென்றார். ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்றபோது, லாரியில் இருந்து எண்ணெய் கசிந்து சாலையில் கொட்டியது. இதனால், வாகன ஓட்டிகள் திணறினர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற, ராயபுரத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., சுரேஷ், 48 என்பவர் வழுக்கி விழுந்தார். காலில் முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.