மெரினாவில் ஒற்றுமை பேரணி போக்குவரத்து மாற்றம்
சென்னை, இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில், மெரினா கடற்கரையில், இன்று மாலை 5:00 மணிக்கு, ஒற்றுமை பேரணி நடக்கிறது.தமிழக காவல் துறை டி.ஜி.பி., அலுவலகத்தில் துவங்கி, போர் நினைவுச் சின்னம் வரை, பேரணி நடக்கவுள்ளது.இப்பேரணியில், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என, 25,000 பேர் பங்கேற்க உள்ளதால், மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பேரணி செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.அதன் விபரம்:* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வாகனங்கள் வர தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை பயன்படுத்தலாம்.அதேபோல், பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக செல்லலாம்.* அண்ணா சாலையிலிருந்து வரும் எம்.டி.சி., பேருந்துகள், வெலிங்டன் சந்திப்பு - ஜி.பி.,சாலை - டவர் கிளாக் - ஜி.ஆர்.எச்., பாயிண்ட் - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்., தெரு - மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக மத்திய கைலாஷ் அடையலாம்.* கிரீன்வேஸ் பாயின்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ.புரம், இரண்டாவது பிரதான சாலை, டி.டி.கே., சாலை - ஆர்.கே., சாலை - அண்ணாசாலை வழியாக செல்லலாம்.* வணிக வாகனங்கள், காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை - ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை தடைசெய்யப்பட்டு உள்ளது.
வாகன நிறுத்துவதற்கான இடங்கள்
காந்தி சிலை தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கிவிடும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல் மைதானத்திற்கு திருப்பி விடப்படும். பங்கேற்பாளர்களுக்காக, பொதுப்பணித்துறை மைதானத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொடிமர சாலை வழியாக, தீவுத்திடல் மைதானத்தில் வி.ஐ.பி., வாகனங்களை நிறுத்தலாம் பொது வாகன ஓட்டிகள், காமராஜர் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.