| ADDED : பிப் 17, 2024 12:33 AM
சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான சோமசுந்தரம் கோப்பை யு - 14 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.இதில், நேற்று நடந்த போட்டியில், டான்பாஸ்கோ மற்றும் செயின்ட் மைக்கேல் அகாடமி அணிகள் மோதின.முதலில் பேட் செய்த டான்பாஸ்கோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய செயின்ட் மைக்கேல் அகாடமி அணி, ஆறு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் டான்பாஸ்கோ அணி த்ரில் வெற்றி பெற்றது. காந்தி நகரில் நடந்த மற்றொரு போட்டியில், மேற்கு மாம்பலம் அரசு பள்ளி மற்றும் கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி அணிகள் மோதின.முதலில் முதல் பேட் செய்த பத்ம சேஷாத்ரி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி அளித்தது. சீட்டு கட்டு போன்று விக்கெட்டுகள் சரிந்தன. முடிவில், 26.2 ஓவர்களில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு மாம்பலம் அணிக்கு, சேஷாத்ரி பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். முடிவில் 20.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அரசு பள்ளி வெற்றி பெற்றது.