சென்னை ; வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், ஸன்னி லாய்ட் கூட்டணி, மேலும் ஒருவரிடம், 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது அம்பலமாகி உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் பிரபு, 31. அதே அலுவலகத்தில் ஆய்வாளராக தாமோதரன், 41, அலுவலக ஊழியராக பிரதீப், 42, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். தற்போது மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். மிரட்டி வழிப்பறி
இவர்கள் மூவரும், சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, சைதாப்பேட்டை போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்ட், 48, ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, சென்னையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டும் ரூபாய் நோட்டுகளை, ஹவாலா பணம் என மிரட்டி வழிப்பறி செய்து வந்துள்ளனர்.கடந்த மாதம், 16ம் தேதி இரவு, திருவல்லிக்கேணி பகுதியில், முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்திச் சென்று, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர். அவர் அளித்த புகாரில், ஐந்து பேரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்டை, திருவல்லிக்கேணி போலீசார் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, ஸன்னி லாய்ட் அளித்த வாக்குமூலத்தில், 'நான், ராஜா சிங், பிரபு, தாமோதரன், பிரதீப், வணிக வரித்துறை அலுவலகத்தில் அலுவலர்களாக பணிபுரியும் சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து, டிசம்பர் 11ம் தேதி, ஆயிரம் விளக்கு பகுதியில், தமீம் அன்சாரி என்பவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தோம்' என்று கூறியுள்ளார். மீண்டும் கைது
இதையடுத்து, ராஜா சிங், ஸன்னி லாய்ட் உள்ளிட்ட ஏழு பேர் மீது, ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், ராஜா சிங் உள்ளிட்ட ஐந்து பேரையும் மீண்டும் கைது செய்ய உள்ளனர். தலைமறைவாக உள்ள சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பல கோடி ரூபாய்க்கு சொத்து குவிப்பு
சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், ஸன்னி லாய்ட் ஆகியோர், பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.திருவல்லிக்கேணி போலீசார், ஸன்னி லாய்டை, அவரது சொந்த ஊரான, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர், மார்த்தாண்டத்தில், 2 கிரவுண்ட் நிலத்தில், மூன்று மாடிகள் உடைய வீடு கட்டி இருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை செய்த போது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சென்னை வேளச்சேரி பகுதியில், பல கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், ஆவடியில், 1,400 சதுர அடியில் மூன்று மாடி வீடு, கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் வாங்கியதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.இதுகுறித்து ஸன்னி லாய்டிடம் விசாரித்த போது, ஜாம்பஜார் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறேன். அதில் கிடைத்த வருமானத்திலும், ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி பெயரிலும், என் பெயரிலும், வங்கிகளில் கடன் பெற்று, சொத்துக்கள் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அதேபோல, ராஜா சிங், அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மற்றும் சென்னையில், பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வழிப்பறி செய்து, பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.