பிரேயர் யூ - 16 கிரிக்கெட் கிரீன் பீல்டு சி.ஏ., வெற்றி
சென்னை, 'பிரேயர் யூ - 16' கிரிக்கெட் போட்டியில், கிரீன் பீல்டு சி.ஏ., அணி, 77 ரன்கள் வித்தியாசத்தில், நாதெல்லா சி.ஏ., அணியை தோற்கடித்தது.லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், பிரேயர் கோப்பைக்கான யூ - 16 கிரிக்கெட் போட்டிகள், புழலில் நடக்கின்றன. கிளப்களுக்கு இடையிலான இப்போட்டியில், மொத்தம் ஐந்து அணிகள், தலா நான்கு போட்டிகள் வீதம் மோதி வருகின்றன.நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் சுற்றில், செயின்ட் ஜோசப் சி.ஏ., 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 156 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த நாதெல்லா சி.ஏ., அணி, 24 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், கிரீன் பீல்டு சி.ஏ., மற்றும் நாதெல்லா அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கிரீன் பீல்டு 25 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழந்து, 140 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் ரிஷிகேஷ் கங்காதர் ஐந்து விக்கெட் எடுத்து, 22 ரன்களை கொடுத்தார். அடுத்து களமிறங்கிய, நாதெல்லா சி.ஏ., அணி, 18.4 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 63 ரன்களில் சுருண்டது. இதனால், 77 ரன்கள் வித்தியாசத்தில் கிரீன் பீல்டு அணி வெற்றி பெற்றது.பத்மா சாரங்கபாணி சி.ஏ., 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 130 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த, செயின்ட் ஜோசப் அணி, 25 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 124 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்கின்றன.