500 அடி மழைநீர் வடிகால் பணி நிறுத்தம் எர்ணாவூரில் வெள்ள பாதிப்பு அபாயம்
எண்ணுார், எர்ணாவூரில் விடுபட்ட, 500 அடி நீளம் மழைநீர் வடிகால் பணியை முடிக்காவிடில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில், 3,220 கோடி ரூபாயில், பல்வேறு தொகுப்புகளாக மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது.அதன்படி, திருவொற்றியூர் மண்டலம், 4 வது வார்டு, எர்ணாவூரின் பல பகுதிகளில், திறந்தவெளி கால்வாய்களுக்கு மாற்றாக, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், திருவீதியம்மன் நகர், 5 வது தெரு கடைசி முதல் - மேட்டுத் தெரு வரை, 3 அடி அகலம், 4 அடி உயரத்துடன், 990 அடி நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.ஆனால், 490 அடி அளவிற்கே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது; 500 அடி நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணி துவங்கப்படவில்லை. கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், ஒப்பந்த நிறுவனம் மெத்தனம் காட்டி வருகிறது.விடுபட்ட மழைநீர் வடிகால் பணியால், எர்ணாவூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பணிகளை விரைந்து முடிக்க, தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.இல்லாவிடில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாற்று ஒப்பந்தம் வழங்கி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.