தெருநாய்கள் தினசரி 20 பேரை கடிக்கின்றன புகாரளிக்க வரும்படி மாநகராட்சி அழைப்பு
- நமது நிருபர் -சென்னை மாநகராட்சியில், தினசரி 20க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு இருந்தால் உடனடியாக, '1913' அல்லது சேவை தளங்களை பயன்படுத்தி தெரியப்படுத்த, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில், தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை, நோய் பரவலை தடுக்க வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசிகள், மாநகராட்சி சார்பில் போடப்பட்டாலும் முழுமையான தீர்வு ஏற்படவில்லை. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் வாகனத்தில் செல்வோரை, தெருநாய்கள் கடித்து வருகின்றன. இதற்கு தடுப்பூசி போடப்பட்டாலும் சிலர், 'ரேபிஸ்' நோய் தாக்கி உயிரிழந்து வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மருத்துவமனைகளில், தினசரி 20 பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில், ஒருசில நாய்க்கடி சம்பவம் மட்டுமே மாநகராட்சி தெரியப்படுத்தப்படுகிறது. பெரும்பாலானோர், நாய் கடித்தால் சிகிச்சை பெறுகின்றனரே தவிர, அதுகுறித்து மாநகராட்சி தெரியப்படுத்துவதில்லை. எனவே, அனைத்து நாய்க்கடி சம்பவங்களும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை ஆலோசித்து வருகிறது. அதன்படி, நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவோர் விபரம், அவர்களை நாய் கடித்த இடம் ஆகியவற்றை மருத்துவமனைகள், மாநகராட்சி தெரியப்படுத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது. பொதுமக்களும், '1913' மற்றும் மாநகராட்சி சமூக வலைதள சேவை தளங்களிலும் நாய்க்கடி குறித்து தெரியப்படுத்தலாம். அப்போது தான், ரேபிஸ் நோய் பாதித்த நாய்களை கண்டறிந்து, மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.