உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்த சில்மிஷ வாலிபரை கத்தியை காட்டி துரத்திய மாணவி

வீடு புகுந்த சில்மிஷ வாலிபரை கத்தியை காட்டி துரத்திய மாணவி

வடபழனி வீடு புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபரை, கத்தியை காட்டி மிரட்டி மாணவி துரத்தியடித்தார். வடபழனியைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி, மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். கடந்த 16ம் தேதி, மாலை 4:00 மணியளவில், வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென வீட்டிற்குள் புகுந்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்த மாணவி, பின் சுதாரித்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டி, அந்த நபரை தாக்க முயன்றார். உடனே அந்த நபர், வீட்டிற்கு வெளியே வந்து, வெளிப்புறமாக கதவை பூட்டி தப்பி சென்றார். சம்பவம் குறித்து, வடபழனி மகளிர் போலீசார் விசாரித்தனர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், சாலிகிராமம், சிங்காரவேல் தெருவைச் சேர்ந்த குமரேசன், 30, என்பவர், அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், குமரேசன் வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து மது அருந்தி உள்ளார். மேலும் மது வாங்கி தருவதாக கூறியதால், அதே பகுதியில் குமரேசன் காத்திருந்தார். அப்போது, தனியாக சென்ற கல்லுாரி மாணவியை பின் தொடர்ந்து சென்று, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ