மாணவியின் உடல் மாறியதால் அதிர்ச்சி: ஸ்டான்லி மருத்துவமனையில் குளறுபடி
சென்னை: மணலியில் துாக்கிட்டு உயிரிழந்த கல்லுாரி மாணவியின் உடலுக்கு பதிலாக, மற்றொரு மாணவியின் உடல் வழங்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி, கிராம தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 18; கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி. குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மணலி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மணலியில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாணவியின் உடலை உறவினர்கள் பார்த்த போது, அது பிரியதர்ஷினியின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள், தவறுதலாக மாற்றி வழங்கப்பட்ட மாணவியின் உடலை, மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மாற்றி வழங்கப்பட்ட மாணவியின் உடலை ஒப்படைத்து விட்டு, பிரியதர்ஷினியின் உடலை வாங்கி வந்து, இறுதி சடங்குகளை செய்தனர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம், மேட்டு காலனியைச் சேர்ந்த அனுஷ்கா, 17, என்பவர், நேற்று முன்தினம் துாக்கிட்டு இறந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக, ஆரம்பாக்கம் போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுஷ்காவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், தவறுதலாக மணலியைச் சேர்ந்த பிரியதர்ஷினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்தது. இச்சம்பவம், இரு தரப்பு உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.