சப் - ஜூனியர் ஹாக்கி: மிசோரம் அணி அபாரம்
சென்னை, சென்னையில், தேசிய அளவில் நடந்து வரும் சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியில், மிசோரம் அணி, 15 - 0 என்ற கோல் கணக்கில், திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, தேசிய அளவில் ஆண்களுக்கான, 15வது தேசிய சப் - ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடத்தி வருகின்றன. நேற்றைய முதல் போட்டியில், ராஜஸ்தான் அணி, புதுச்சேரி அணியை எதிர்கொண்டது. இதில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால், டிராவில் முடிந்தது. அடுத்து நடந்த பீஹார் மற்றும் உத்தரகண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியும், 3 - 3 என, டிராவில் முடிந்தது. மூன்றாவது போட்டியில், மிசோரம், திரிபுரா அணிகள் மோதின. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிசோரம் அணி, 15 கோல்கள் அடித்து, எதிர் அணியை திகைக்க வைத்தது. திரிபுரா அணி, ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியடைந்தது. அடுத்த போட்டியில், அருணாச்சல பிரதேசம் அணி, சத்தீஸ்கர் அணியை எதிர்கொண்டது. இதில், சத்தீஸ்கர் அணி 4 - 0 என, அருணாச்சல பிரதேசத்தை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த குஜராத், கோவா அணிகளுக்கு இடையிலான போட்டியில், குஜராத் அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்த போட்டி யில், கேரளா - மணிப்பூர் அணிகள் மோதின. இதில், மணிப்பூர் அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.