திடீர் சாமியார் அகோரி மீது போலீசில் மனைவி புகார்
ஓட்டேரி, யு-டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் கலையரசன் என்கிற 'அகோரி' கலையரசன். இவர் தன்னை முன் ஜென்ம சாமியார் என கூறிக்கொண்டு, திருமுல்லைவாயில் பகுதியில் கோவில் கட்டி, பணம் சம்பாதித்து வந்தார். இவர், சமூக வலைதளம் மூலம் பழக்கமான பிரகலட்சுமி என்பவரை, அறிமுகமான ஒன்பது நாளிலேயே, 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.சர்ச்சை சாமியாரான கலையரசன், கடந்த மாதம் 28ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், இதற்கு பயந்து பழனிக்கு சென்றுவிட்டதாகவும் புகார் கொடுத்திருந்தார்.புளியந்தோப்பு துணை ஆணையர் நேற்று 'அகோரி' கலையரசன் மற்றும் அவரது மனைவி பிரகலட்சுமி ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தார். விசாரணையில் இரு தரப்பும் சரமாரி புகார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த கலையரசன் கூறுகையில், ''என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை ஆள் வைத்து மிரட்டுகின்றனர். கமிஷனர் அலுவலகத்தில் நான் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும். நீதிமன்றம் வாயிலாக பெற்றுக் கொள்கிறேன். ''இனி சமூக வலைதளங்களில் எங்கேயும் நான் பேட்டி தர மாட்டேன் என காவல்துறையின் தரப்பில் எழுதி வாங்கிக் கொண்டனர். எனக்கு என் மனைவி குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்,'' என்றார். விசாரணை முடிந்து வந்த பிரகலட்சுமி கூறுகையில், ''என்னையும் என் தம்பியையும் கலையரசன் தாக்கினார். என்னைப்பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் கொடுத்துள்ளேன். கலையரசன் சொல்வதெல்லாம் பொய். விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன். எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை,'' என்றார்.