சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு துணை நடிகர், தி.மு.க., நிர்வாகி கைது
கோயம்பேடு, கோயம்பேடு விடுதியில் அடைத்து வைத்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த துணை நடிகர் மற்றும் தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டனர். சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி கொடுமைப்படுத்திய வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மாள், 45, உட்பட ஆறு பேரை, கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில், யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என, தொடர்ந்து விசாரித்தனர். இதில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி கண்ணா, 60, மற்றும் அவரது நண்பரான திருவள்ளூரைச் சேர்ந்த ரமேஷ், 40, ஆகிய இருவரும், கோயம்பேடில் உள்ள ஒரு தனியார் விடுதியில், சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதில், பாரதி கண்ணா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் பட்டய கிளப்பு, பேய காணோம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளதும் தெரியவந்தது. தி.மு.க., பிரமுகரான ரமேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். இருவர் மீதும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.