எழுத்தாளர் அம்பைக்கு சூர்ய விருது
சென்னை, ''இலக்கியம் என்பது சமூகத்தின் துடிப்பை பிரதிபலிக்கிறது. ஆங்கிலம் பேசுவதுதான் சிறந்தது என்ற நிலை இருந்த காலத்தில், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையானது என, மகாகவி பாரதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தன் எழுத்தால் அவர் புரட்சி செய்தார்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கான சூர்ய மற்றும் அக் ஷர விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், எழுத்தாளர் அம்பைக்கு சூர்ய விருதும், நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு அக் ஷர விருதும் வழங்கப்பட்டது.விருதுகளை வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது:சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை, சமுகத்திற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. இதன் வாயிலாக பின்தங்கிய குழந்தைகள் உள்ளிட்ட பலர் நன்மை அடைந்துள்ளனர். அந்த வகையில் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு விருது வழங்கியது சிறப்பானது.மொழியின் சிறந்த வெளிப்பாட்டை இலக்கியம் வெளிக்காட்டுகிறது. சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலம் பேசுவதுதான் சிறந்தது என்ற நிலைப்பாட்டை, அப்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கினர். அதை தவிர்த்து, மற்ற மொழி பேசுவோரை அவர்கள் பொருட்டாக கருதவில்லை. ஆனால், பாரதியார் அதை எதிர்த்தார். தமிழ் மொழி மற்ற மொழிகளுக்கு இணையானது என்ற கருத்தை, அவர் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்தார். அவர் தம் எழுத்தால், மக்களிடம் புரட்சியை கொண்டு சேர்த்தார். இலக்கியம் என்பது சமூகத்தின் துடிப்பை பிரதிபலிக்கிறது. நான் படித்து வளர்ந்த காலகட்டத்திலும் நிறைய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் இருந்தனர். அவர்களின் மொழி வேறாக இருப்பினும், சிந்தனை ஒன்றாகவே இருந்தது. சுதந்திரத்திற்கு பின், நம் தலைவர்கள் மக்களிடையே பலவற்றை எதிர்பார்த்தனர். புத்தகங்கள் இந்தியாவை பற்றி எடுத்துக் கூறுகிறது. கார்ல் மார்க்ஸ் கடந்த கால நிகழ்வுகளை மறக்க, புதிய வரலாறு வேண்டும் என்று நினைத்தார்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, அறக்கட்டளை தலைவர் சிவசங்கிரி சாகித்ய அகாடமி செயலர் சீனிவாசன், சாஸ்த்ரா பல்கலை இயக்குனர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.