| ADDED : டிச 28, 2025 05:23 AM
சென்னை: பல்கலை இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதலாவது காலிறுதி ஆட்டத்தில், அண்ணா பல்கலையை வீழ்த்தி, சென்னை பல்கலை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அகில இந்திய பல்கலை கூட்டமைப்பின் ஒத்துழைப்போடு, சென்னை, அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல பல்கலை அணிகள் இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள், கடந்த 25ம் தேதி மு தல் நடந்து வருகின்றன. இதில் 90க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், நேற்று காலை, காலிறுதிப் போட்டிகள் நடந்தன. முதலாவது காலிறுதியில் அண்ணா பல்கலை அணியுடன், சென்னை பல்கலை அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியின் துவக்கம் முதலே, ஆதிக்கம் செலுத்திய சென்னை பல்கலை அணி, இறுதியில் 3 - 0 என்ற புள்ளிகணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்து நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை எதிர்த்து, விசாகப்பட்டினத்தின் காந்தி பல்கலை அணி களமிறங்கியது. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 3 - 0 என்ற புள்ளிகணக்கில் எளிதாக வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது . அரையிறுதிக்கு முன்னேறும் அடுத்த இரண்டு பல்கலை அணிகளை தீர்மானிக்கும் காலிறுதி போட்டிகள், தொடர்ந்து நடக்கின்றன.