முதியவரை கடிக்க பாய்ந்த நாயை அடித்து கொன்ற டீக்கடைக்காரர் கைது
சென்னை: மயிலாப்பூரில், முதியவரை கடிக்க பாய்ந்த தெரு நாயை கட்டையால் அடித்து கொன்ற டீக்கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர், பஜார் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 56. இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், அவரது கடைக்கு அருகே முதியவர் ஒருவரை தெரு நாய் கடிக்க பாய்ந்தது. உடனே முதியவர், கீழே கிடந்த கற்களை எடுத்து நாய் மீது வீசினார். இதை பார்த்த டீக்கடைக்காரர் முதியவரை காப்பாற்றுவதற்காக மரக்கட்டையை கையில் வைத்து நாயை விரட்டியுள்ளார். அப்போது, மோகனையும் கடிக்க வரவே, கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து நாயின் உடலை அருகே இருந்த குப்பை தொட்டியில் வீசியுள்ளார். இதை அங்கு இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து, டீக்கடைக்காரர் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.