நாய்களுக்கு உணவளித்த மூதாட்டியை ஹெல்மெட்டால் தாக்கிய ஆசிரியர்
சென்னை: நாய்களுக்கு உணவளித்த மூதாட்டியை, ஆசிரியர் ஒருவர், 'ஹெல்மெட்'டால் தாக்கியது குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடி கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 76. இவர், நேற்று முன்தினம் வீட்டருகே நாய்களுக்கு உணவு வைத்து கொண்டிருந்தார். அதை பார்த்து ஆத்திரமடைந்த, அதே தெருவில் வசிக்கும் மத்திய அரசு பள்ளி ஆசிரியர் பாலமுருகன், 48, மூதாட்டியை, ஹெல்மெட்டால் தாக்கினார். அவரை தடுக்க வந்த மற்றொரு பெண்ணையும் கீழே தள்ளிவிட்டு, மீண்டும் மூதாட்டியை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்த நிலையில், இருதரப்பும் சமாதானமாக சென்றனர். இந்நிலையில், பாலமுருகன், ஹெல்மெட்டால் மூதாட்டியை தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.