யு - 13 கால்பந்து போட்டியில் தடம் எப்.சி., சாம்பியன்
சென்னை:அகாடமி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான, 'யு - 13' கால்பந்து போட்டியில், சோழிங்கநல்லுார் தடம் எப்.சி., அணி, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை நிகர்நிலை பல்கலை சார்பில், 'யு - 13' கால்பந்து போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று நிறைவடைந்தன. அகாடமி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'லீக்' மற்றும் 'சூப்பர் லீக்' அடிப்படையில் நடந்தன. 'சூப்பர் லீக்' ஆட்டத்தில், தடம் எப்.சி., அணி, 11 - 2 என்ற கோல் கணக்கல், அசுரா எப்.சி., அணியையும், புழல் எப்.சி.ஏ., அணி, 6 - 4 என்ற கோல் கணக்கில் அசுரா எப்.சி., அணியையும் வீழ்த்தின. கடைசி 'லீக்' ஆட்டத்தில் தடம் எப்.சி., அணி, 10 - 1 என்ற கோல் கணக்கில் புழல் எப்.சி.ஏ., அணியை தோற்கடித்தது. அனைத்து போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், சோழிங்கநல்லுார் தடம் எப்.சி., அணி முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. புழல் எப்.சி.ஏ., இரண்டாமிடம், ஓ.எம்.ஆர்., படூர் அசுரா எப்.சி., அணி மூன்றாம் இடம் பெற்றன.