தாய்லாந்து சுற்றுலா சென்றவர் ஆழ்கடலில் மூச்சுத்திணறி பலி
ஆதம்பாக்கம்:தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றவர், ஆழ்கடலில் வண்ண மீன்களை ரசித்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆதம்பாக்கம், மண்ணடியம்மன் கோவில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் திவாகர், 48. இவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். திவாகரின் நிறுவனம் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் நிறுவன பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோரை, தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அவர்களுடன், கடந்த 15ம் தேதி திவாகரும் புறப்பட்டு சென்றார். கடந்த சனிக்கிழமை மாலை, தாய்லாந்தில் உள்ள ஆழ்கடலில், வண்ண மீன்களை பார்க்க சென்றார். அப்போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கடற்பயிற்சியாளர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி திவாகர் உயிரிழந்தார். இதை, அந்நாட்டு மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின், திவாகர் வேலை பார்த்த நிறுவனம் சார்பில், அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திவாகருக்கு, சில ஆண்டுகளாகவே 'வீசிங்' மூச்சிரைப்பு பிரச்னை இருந்துள்ளது. இதனால், 'எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும் திவாகர், ஏன் ஆழ்கடலுக்கு சென்றார் என்பது தெரியவில்லை' என, குடும்பத்தார் கண்ணீர் மல்க கூறினர்.
அரசுக்கு கோரிக்கை
தாய்லாந்தில் உயிரிழந்த கணவரின் உடலை, சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி, தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளுக்கு, திவாகரின் மனைவி மகேஸ்வரி கடிதம் அனுப்பி வைத்தார். மேலும், அவரது உடலை சென்னைக்கு கொண்டுவர உதவும்படி, தமிழக அரசிசுக்கு குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.