கோவில் விரிவாக்க கட்டடத்தை இடித்து அகற்றியது ராணுவம்
ஆலந்துார், ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில், அனுமதிபெறாமல் நடந்த கோவில் விரிவாக்க கட்டுமான பணிகளை, ராணுவ வீரர்கள் அகற்றினர்.மீனம்பாக்கம், குளத்துமேடு பகுதியில், ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டவோ, இருக்கும் கட்டடங்களை மாற்றி அமைக்கவோ கூடாது என, ராணுவம் எச்சரித்துள்ளது.அங்குள்ள குளத்துமேடு பகுதியில், 1975ல் கட்டப்பட்ட கருமாரியம்மன் கோவில் உள்ளது. சங்கர், 80, என்பவர் பூசாரியாக உள்ளார். கடந்த வாரம், பொதுமக்கள் பங்களிப்போடு கோவிலை, கான்கிரீட் கட்டமைப்புடன் விரிவாக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று மாலை, 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வந்தனர். ராணுவ அனுமதி பெறாமல் கோவிலை விரிவாக்கம் செய்யக்கூடாது எனக்கூறி, புதிய கட்டுமானத்தை இடித்து அகற்றினர். தடுக்க வந்த பொதுமக்களையும் விரட்டினர்.மீனம்பாக்கம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.