ஒன்பது சிறுமியர், சின்னஞ்சிறு கைகளால் அம்பாளை, ஜெகத் ஜனனியாக போற்றினர். அப்போது நிகழ்ந்தது மது, கைடபன் கதை:பிரம்மாவை அசுரர்கள் சிறைபிடித்து, 'கமல மலர் விட்டு கடிக செல்' என்று கூற, நாராயணன், அசுரர்களோடு சண்டையிடும் காட்சி அற்புதமாக இருந்தது. அசுரர்கள் வஞ்சிக்கப்பட்டு, விஷ்ணு தொடையில் அடித்தக் காட்சியும் அசத்தலாக நிகழ்த்தப்பட்டது.தேவரும், அசுரரும் சேர்ந்து அமிர்தம் கடைய, பெற்ற அமிர்தத்தை அசுரர்கள் கைப்பற்ற, அம்பிகை மோகினி ரூபம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதை நாட்டியத்தில் நன்கு வெளிப்படுத்தினர்.மோகினியின் அழகில் மயங்கி, அசுரர்கள் செய்த நிகழ்வுகள், ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 'தாக் ஷாயணியே, வேலனுக்கு வேல் கொடுத்தவளே' என, அம்மையின் கதையை ரத்தின சுருக்கமான கூறிச் சென்றனர்.'ஹர ஹர மஹாதேவா' என பாடல் ஒலிக்க, முப்பெரும் தேவரும் அண்டம் அதிர ஆடிட, தீப ஜோதியாய் அரங்கினுள் அன்னை தோன்றினாள்.அன்னை சினத்தை அசுரர்கள் அதிகரிக்க, அவளின் கோப சிரிப்பில் அரங்கமே அதிர்ந்தது. அசுரர் படை திரண்டது. சண்டை அனல் பறக்க, அசுரரை வதம் செய்து அனைவருக்கும் மஹிசாசுரமர்த்தினி காட்சி அளித்தார்.தொடர்ந்தது, சும்பன், விசும்பன் கதை:அசுரர்கள், அம்பிகையின் அழகில் மயங்கி, தன் தலைவருக்கு இவளே ராணியாக வர வேண்டும் என துாது போய், அன்னையின் கோபத்தை துாண்ட, அந்த கோபத்தால் அரங்கம் பயத்தில் இருக்க, அசுரர் படை திரண்டது.சிவனே துாதுவராக வந்து போரை கைவிடும்படி எச்சரித்தார்; கேட்கவில்லை. முனிவர்களையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்த, அனைவரும் அன்னையை வேண்டினர்.ஒவ்வொரு வாகனத்தோடு ஒவ்வொரு அற்புத வடிவ அம்பிகைகளும் தோன்ற, அகிலாண்டேஸ்வரி நடுவிலிருக்க சண்டை துவங்கியது.ரத்த மீஜனை அழிக்க, காளி உள்நுழைந்து ரத்தம் குடித்து அழித்த காட்சி, மனதை மேலும் கவர்ந்திழுத்தது. நான்கு வேதங்களை வாகனமாய் கொண்டு, தேரில் எழுந்தருள ஒன்பது தேவி ரூபங்களும் ஒன்று சேர, அசுரர்களோடு சண்டையிட்டு ஸ்ரீ லலிதாம்பிகையாக நின்று, பக்தியால் ரசிகர்களின் மனதை வசப்படுத்தினர்.ஒவ்வொரு கதையையும், சக்ஜானா ரமேஷ் ரசிகர்களுக்கு விளக்கிக் கூறினார். முருகன் மற்றும் அவரின் குழுவின் ஒளி அமைப்பு, இந்நாட்டியத்திற்கு உயிர் கொடுத்தது.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், ஷீலா உன்னி கிருஷ்ணனின் ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டியக் குழுவினர் இந்நாட்டியம், ரசிகர்களின் நினைவில் எப்போதும் நீங்காது.-மா.அன்புக்கரசி,மாணவி, தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.