சேதமான மின் கேபிள்களால் விபத்து அபாயம் உயிர் பலிக்கு பிறகும் திருந்தாத மின் வாரியம்
கண்ணகி நகர்: கண்ணகி நகரில், சாலையின் மேல் உள்ள சேதமடைந்த மின் கேபிள்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, கண்ணகி நகரில் 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஆபத்தான நிலையில் மின் இணைப்புகள் உள்ளன. சாலையின் குறுக்கே, மின் கேபிள்களை முறையாக பதிக்காமல், சாலையின் மேல் பகுதியில் அமைத்துள்ளனர். இதனால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்து, அதில் நடந்து செல்லும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. கண்ணகி நகரை ஒட்டியுள்ள எழில் நகரை சேர்ந்த துாய்மை பணியாளர் வரலட்சுமி, ஆக., மாதம் பணிக்கு சென்றபோது, சாலையின் குறுக்கே சேதமடைந்த மின் கேபிளில் இருந்து மின்சாரம் பாய்ந்து பலியானார். சாலையில் தேங்கும் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து, அதுபோன்ற உயிர் சேதம் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலையில் நடக்கவே அச்சப் படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: துாய்மை பணியாளர் பலியான சம்பவத்திற்கு பின், பெயரளவுக்கு மட்டும் சீரமைப்பு பணிகளை மின் வாரியம் செய்தது. இன்னும், சாலையின் மேல் சேதமான நிலையில் கேபிள்கள் உள்ளன. ஒரு அடிக்கு கீழே பதிக்க வேண்டிய மின் கேபிள்கள், கால், அரை அடியில் பதிக்கப்பட்டுள்ளன. அந்த கேபிள் சேதமடைந்திருந்தால், அங்கு தேங்கும் மழைநீரில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இதனால், மழைநீர் தேங்கி நிற்கும் சாலையில் நடக்கவே அச்சமாக உள்ளது. மீண்டும் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மின்வாரிய அதிகாரி களிடம் கேட்டபோது, ''வடிகால் பணி, இதர சேவை துறைகளால், அதிக அளவு கேபிள்கள் சேதமடைகின்றன. ஏற்கனவே வந்த உபகரணங்களை வைத்து, சேதமடைந்த கேபிள்களை சரி செய்தோம். ''உபகரணங்கள் பற்றாக் குறை உள்ளதால், கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகரில் முழுமையாக சீரமைக்க முடியவில்லை. கண்ணகி நகர் தேவையை உணர்ந்து உபகரணங்கள் வழங்க வேண்டும்,'' என்றனர்.