விஷ வாயு கசிவில் விலகாத மர்மம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் கிராமத்தெரு, விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 25ம் தேதி மதியம், திடீரென காற்றில் விஷவாயு கசிந்தது. இதனால், பள்ளி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள, 8, 9, 10 ம் வகுப்புகளில் படித்த, 45 மாணவியருக்கு, வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டனர். பெரிய அளவில் பாதிப்பின்றி, சிகிச்சை முடிந்து மாணவியர் வீடு திரும்பினர்.இந்நிலையில், 'பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சரியான காற்றோட்டம் கிடையாது. இரு தினங்களாக காற்றில் விஷவாயு கசிவதாக மாணவியர் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டியதாலேயே, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என, பெற்றோர் குற்றம் சாட்டினர்.மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, விஷவாயு கசிவு குறித்து, காற்று அளவு கண்காணிக்கும் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிக் கல்வி துறை சார்பில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் ஆய்வு மேற்கொண்டார். ஆனால், வாயுக் கசிவுக்கான காரணம் குறித்து, எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டாலும், மழுப்பலாக பதில் கூறுகின்றனர்.வாயு கசிவு ஏற்பட்டு மூன்று நாட்களாகியும், பாதிப்பை கண்டறிய முடியாமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் திணறி வருவதாக, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், காற்றில் வாயு கசிவை கண்டறிய, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கிண்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட நடமாடும் காற்று தர கண்காணிப்பு வாகனத்தை, பள்ளி வளாகத்தில் நிறுத்தியுள்ளது. இதன் வழியாக, வாயு கசிவு விவகாரத்தில் மர்மம் விலகுமா என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.