அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணியர்
திருவாலங்காடு, அடுத்தடுத்து இரண்டு ரயில் நிலையங்களில், புறநகர் ரயில் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த பயணியர், அபாய சங்கிலியை இழுத்து, அடுத்த நிலையத்தில் நிறுத்தினர். ரயில் ஓட்டுநரிடம் தகராறு செய்தனர்.அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று காலை, 6:40 மணியளவில், சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் ரயில் சென்றது. இந்த ரயில் அரக்கோணம் ----- சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும்.அரக்கோணம் அடுத்துள்ள புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட இரண்டு ரயில் நிலையங்களிலும் நிற்காமல் சென்றது. இதனால், அந்த ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய பயணியர் அதிருப்தி அடைந்து, அபாய சங்கிலியை இழுத்தனர்.பின், திருவாலங்காடு நிலையத்தில் ரயில் நின்றதும், ரயில் ஓட்டுநர் இருந்த பெட்டியை நோக்கி சென்ற பயணியர், அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, 'இந்த மார்க்கத்தில் நான் புதிதாக வந்துள்ளேன். அந்த ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்பது தெரியாமல் கடந்து வந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்' என, டிரைவர் கோரியதாக கூறப்படுகிறது. இதைடுத்து, ரயில் பயணியர் அங்கிருந்து சென்றனர். ரயில் இன்ஜின் பழுது
செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், வாலாஜாபாத் கார் ஏற்றுமதி முனையம் இயங்கி வருகிறது. இந்த ஏற்றுமதி முனையத்தில், கார்களை ஏற்றிக் கொண்டு, நேற்று காலை 10:30 மணிக்கு, அரக்கோணம் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயில் இன்ஜின் மற்றும் இணைப்பு பெட்டிகளில் புகை வருவதாக, ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ரயிலை நிறுத்திய ஓட்டுநர், இன்ஜின் மற்றும் இணைப்பு பெட்டிகளை ஆய்வு செய்தார். உராய்வால் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோளாறு 45 நிமிடங்களுக்கு பின் சரிசெய்யப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருமால்பூர் வரையில் இயக்கப்பட்ட மின்சார ரயில், வாலாஜாபாதில் நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் புறப்பட்டபின், மின்சார ரயில் திருமால்பூர் யம் சென்றது. அங்கிருந்து, மீண்டும் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டது. இதனால், செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.