உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை மேடவாக்கம் பாபு நகர் மக்கள் அவதி

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை மேடவாக்கம் பாபு நகர் மக்கள் அவதி

மேடவாக்கம்: மேடவாக்கம், பாபு நகரில் உள்ள சாலைகள் அனைத்தும், சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாபு நகர், காயத்திரி நகர், விமலா நகர், நீலா நகர் உட்பட, ஏழு பகுதிகளில், 40,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, மூன்று மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளி, 10க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள், கூட்டுறவு நியாய விலைக்கடை, மின் வாரிய அலுவலகம் என, மக்கள் அன்றாடம் அணுகும் முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் கூறியதாவது: மேடவாக்கம் பாபு நகர் பகுதியில் இருந்து, மாம்பாக்கம்- - மேடவாக்கம் பிரதான சாலை வழியாக பல பகுதிகளுக்கு செல்லவும், குறிப்பிட்ட சாலையில் இருந்து வருவோர், தாம்பரம் பிரதான சாலை வழியாக பல பகுதிகளுக்கு செல்லவும், பாபு நகரின் முதல் மூன்று தெருக்கள் மற்றும் பாபு நகர் பிரதான சாலை தான் முக்கிய வழித்தடமாகும். ஆனால், இச்சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, 'பீக் ஹவர்' நேரங்களில், போக வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டால், 'பஞ்சாயத்தில் நிதி இல்லை; நிதி வந்தால் சாலை போடுவோம்' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குறிப்பிட்ட நான்கு சாலைகளிலும், ஒட்டுப்பணியாவது மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ