இலவச பட்டா தந்தும் மக்கள் அதிருப்தியால் ஆளுங்கட்சி.டென்ஷன்! வசூலுக்காக உறவுகளை மாற்றி விளையாடிய அதிகாரிகள்
.. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழக அரசு சார்பில், 35,000 பேருக்கு வழங்கிய இலவச பட்டாக்களில், பலரின் உறவு முறையை மாற்றியும், சர்வே எண்களில் குளறுபடி செய்தும், வி.ஏ.ஓ.,க்கள் பதிவேற்றம் செய்ததால், பயனாளிகள் பட்டாக்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டா குளறுபடிகளை திருத்த வருவோரிடம், வருவாய் துறையினர் பெரும் தொகை வசூலிக்க தொடங்கி விட்டனர். இதனால், இலவச வீட்டுமனை பட்டா கொடுத்தும், சட்டசபை தேர்தலில் ஓட்டு பாதிக்குமோ என்ற அச்சத்தில், வருவாய் துறையினர் மீது, ஆளுங்கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நத்தம், தரிசு, மேய்க்கால் புறம்போக்கு போன்ற வகைப்பாடு உடைய அரசு நிலங்களில், ஏராளமானோர் வசிக்கின்றனர். கணக்கு இந்நிலங்களுக்கு பட்டா இல்லாததால், வீடு கட்ட அனுமதி, வரி செலுத்த முடியாதது, வங்கி கடன் கிடைக்காதது போன்ற சிக்கல் ஏற்பட்டன. அதனால் பணம், அதிகார பின்புலம் இருப்பவர்கள், வி.ஏ.ஓ.,விடம் தடையின்மை சான்று பெற்று, பத்திரப்பதிவு செய்து கொண்டனர். இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில், இலவசமாக 'ஆன்லைன்' வழியில், வீட்டு மனை பட்டா வழங்கவும் அரசு முடிவு செய்தது. இதன் வாயிலாக, சட்டசபை தேர்தல் வரும் நிலையில், தங்களுக்கு சாதகமாக அமையும் என, தி.மு.க., கணக்கு போட்டது. இதையடுத்து, வருவாய் துறை இடங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒதுக்கீடு செய்த இடங்கள் என, சென்னையில், 25,000 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 10,000 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், பொதுமக்களுக்கு 'ஆன்லைன்' பட்டா வழங்கினர். தில்லாலங்கடி வேலை இதையடுத்து பலர், வழிகாட்டி மதிப்பீடு கட்டணம் செலுத்தி, பத்திரப்பதிவு செய்து கொண்டனர். வீடு கட்ட அனுமதி, வரி செலுத்துவது, வங்கி கடன், விற்பனை செய்வது போன்ற சிக்கல்கள் நீங்கின.இதனால், பத்திரப்பதிவு மற்றும் வருவாய் துறைக்கு கிடைக்க வேண்டிய 'வருவாய்' தடைபட்டது. இதை பொறுக்க முடியாத, சில வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கூட்டு சேர்ந்து, பணம் வசூலிப்பதற்கான நுாதன கொள்ளை நடத்தியது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, ஆன்லைன் பட்டாக்களில், பெயரில் குளறுபடி செய்து, வேண்டுமென்றே பதிவேற்றம் செய்துள்ளனர். உதாரணத்திற்கு, 'ரேகா மனைவி முருகன், மீரா மனைவி குணதேவன்' என உறவுமுறையை மாற்றி பட்டா வழங்கியுள்ளனர். அதேபோல், தந்தை பெயரை மகனுக்கும், மகன் பெயரை தந்தைக்கும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பலரின் பெயர் மற்றும் சர்வே எண்ணில், எழுத்து பிழை செய்து வழங்கி உள்ளனர். அனைத்து சேவைகளும், ஆன்லைன் வழியாக இருப்பதால் பெயர், சர்வே எண் குளறுபடியால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பட்டா பெற்றவர்கள் திணறுகின்றனர். இதுகுறித்து, அந்தந்த பகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு தகவல் சென்றது. இலவச பட்டா பெற்றவர்கள், ஆளுங்கட்சிக்கு ஓட்டு போடுவர் என நினைத்த தி.மு.க.,வினர், தற்போது கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவறாக பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது, அவர்களின் கோபம் திரும்பி உள்ளது. கூச்சமே இல்லை இதுகுறித்து, பட்டா பெற்றும் பயன்படுத்த முடியாதோர் கூறியதாவது: முதல்வர், துணை முதல்வர் வழங்கிய பட்டாக்களில், பெயர் குளறுபடி செய்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திருத்தித்தர கேட்டால், வி.ஏ.ஓ., - வருவாய் ஆய்வாளர்கள், 'இது பெரிய வேலை. கோட்டாட்சியர் தான் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு செலவாகும்' என, கூச்சமில்லாமல் பணம் கேட்கின்றனர். இடத்தை பொறுத்து, 50,000 முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். எதற்கு எனக் கேட்டால், 'தனியார் பட்டாவுக்கு ஈடாக, இந்த பட்டாவின் மதிப்பு உள்ளது. இன்று விற்றால் கூட, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இதற்கு செலவு செய்தால் என்ன' என்று கேட்கின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு பெயர், சர்வே எண் குளறுபடியை நீக்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, வருவாய் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் சில வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் தவறாக பதிவேற்றம் செய்துவிட்டனர். பட்டாவில் பெயர், சர்வே எண் குளறுபடிக்கு, அந்தந்த தாசில்தார்களிடம் நேரடியாக மனு கொடுத்தால், கோட்டாட்சியர் வாயிலாக திருத்தி, வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் வழங்கும் பட்டாக்களில் இதுபோன்ற தவறு ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை
தாசில்தார் வழங்கிய பட்டாவில் பெயர், சர்வே எண்களை திருத்த, கோட்டாட்சியருக்கே அதிகாரம் உள்ளது; தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை. பொதுமக்கள் வழங்கும் திருத்தல் மனுவை, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் பரிந்துரைத்து, கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். கீழ் இருந்து கோட்டாட்சியர் வரை செல்ல, இரண்டு முதல் ஆறு மாதம் வரை ஆகும். வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளருக்கு பணம் கொடுத்தால், அந்த மனுக்கள் வேகமாக, கோட்டாட்சியர் மேஜைக்கு சென்றுவிடும். கீழ் அலுவலர்கள் செய்யும் தவறால், பொதுமக்கள் பல்வேறு வகைகளில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் கீழ் அலுவலர்கள், விண்ணப்பதாரர்களின் பெயர், சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டு வழங்கிய பட்டாக்களை, தாசில்தார் திருத்தி வழங்கும் வகையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் கூறி வருகின்றனர்.
அடுத்தடுத்து பட்டா
குளறுபடி நீங்குமா?
ஆட்சேபனையற்ற அரசு நிலங்களுக்கு, 2 சென்ட் வரை இலவச பட்டா, அதற்கு மேல் 1 சென்ட் இடத்திற்கு, சந்தை மதிப்பில், 25 சதவீதம் பணம் செலுத்த வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில், 6,039 பேருக்கு பட்டா வழங்க கள ஆய்வு முடிந்தது. விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது. மேலும், நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த, 46 வருவாய் கிராமங்களில், 30,000 பேருக்கு, நத்தம் இடத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் கள ஆய்வு பணி துவங்கி உள்ளது. இதிலும் பெயர், சர்வே எண் குளறுபடி இல்லாமல் பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.