டாஸ்மாக் கடைகளில் சரக்கு தட்டுப்பாடு ரூ.150க்கு இல்லை;ரூ.250தான் இருக்காம்
சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடைகளில், மாலை 6:00 மணிக்கு மேல் குறிப்பிட்ட வகை மதுபாட்டில்கள் கிடைப்பதில்லை என, மதுப்பிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகம் முழுதும், 4,000த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், ஐந்து மண்டலங்களின் கீழ் இயங்குகின்றன. சென்னை மண்டலத்தில், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை, காஞ்சிபுரம் வடக்கு, திருவள்ளுர் வடகிழக்கு என, 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அம்பத்துார் மற்றும் செம்பரம்பாக்கத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது விநியோகம் நடக்கிறது. கடைகளின் விற்பனைக்கேற்ப மதுபானங்களும் தினசரி கொள்முதல் செய்யப்படுகின்றன.குவாட்டர் மதுபாட்டில், 140 ரூபாயில் துவங்கி, பிராந்தி, பீர், ரம், வோட்கா என பல வகைகளில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. வசதிக்கேற்ப குடிமகன்கள் மதுவகைகளை வாங்கி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில், மாலை 6:00 மணிக்கு மேல் விரும்பி கேட்கும் மதுவகைகள் கிடைப்பது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, மதுப்பிரியர்கள் சிலர் கூறியதாவது:டாஸ்மாக் கடையில் நல்ல சரக்கு என்பதே கிடையாது. அப்படி இருந்தும் பாட்டிலுக்கு மேல், 10, 20 ரூபாய் அதிகம் கேட்கின்றனர். டாஸ்மாக் கடையில் பெரும்பாலும் 140, 170, ரூபாய் மதிப்பிலான பாட்டில்களே அதிகம் விற்கப்படுகிறது. சென்னை, தாம்பரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், மாலை 6:00 மணிக்கு மேல் விரும்பி கேட்கும் பிராண்ட் கிடைப்பதில்லை. ஒருவர் 140 அல்லது 170 ரூபாயில் விற்கும் பிராந்தி, வோட்கா வகையை கேட்டால், 'அது இல்லை; 250 ரூபாய் சரக்கு தான் இருக்கு என, புது பிராண்ட் மதுவை தருகின்றனர். விற்காமல் முடங்கியுள்ளதை எங்கள் தலையில் கட்டிவிடுகின்றனர். எதிர்த்து கேட்டால் இஷடம் இருந்தா வாங்கு; இல்லாட்டி நடையைக் கட்டு என்கின்றனர்.குறைந்த விலை மது வகைகளை டாஸ்மாக் கடைகளில், 'பார்' நடத்துபவர்களுக்கு விற்றுவிடுவதே இந்த சிக்கலுக்கு காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.