உரிமையாளரிடமே போனை விற்க முயன்று சிக்கிய திருடன்
கோயம்பேடு;கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி கடை உரிமையாளரிடம் திருடிய மொபைல் போனை, அவரிடமே விற்க முயன்ற திருடன் வசமாக சிக்கினார். கோட்டூர், ஏரிக்கரை சாலையை சேர்ந்தவர் உமாசங்கர், 43; கோயம்பேடு சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை காய்கறி சந்தை வளாகத்தில் வந்த லாரிகளில் இருந்து, கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது மொபைல் போன் திருட்டு போனது. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், உமாசங்கர் வியாபாரம் முடிந்த பின், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த இருவர், 'அவசரமாக பணம் தேவைப்படுகிறது. தங்களது மொபைல் போனை வைத்து விட்டு 8,000 ரூபாய் அளிக்கும்படியும், பிறகு பணத்தை தந்துவிட்டு, போனை பெற்றுக் கொள்வோம்' எனவும் கூறியுள்ளனர். சந்தேகமடைந்த உமாசங்கர், மொபைல் போனை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். அதை வாங்கி பார்த்தபோது, தன் மொபைல் போன் என, தெரியவந்தது. இதையடுத்து, கடை ஊழியர்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் பிடிபட்டார். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், கோயம்பேடைச் சேர்ந்த சந்தோஷ், 23 என, தெரியவந்தது. அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.