சிறுசேரியில் மூன்றாவது பணிமனை: 30 ஏக்கர் இடம் தேடுது மெட்ரோ
சென்னை, 'இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்றாவது பணிமனை அமைக்க சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே, 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய உள்ளோம்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் இரண்டாம் கட்ட திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும், 2027ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை திட்டமிடப்பட்டு உள்ளது. ஓட்டுநர் இல்லாத, 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம், 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்கும் வகையில், மூன்று இடங்களில் பணிமனை அமைத்து இயக்க உள்ளோம்.மாதவரத்தில், 48.89 ஏக்கர் பரப்பளவில், 284.51 கோடியிலும், பூந்தமல்லியில், 38 ஏக்கர் பரப்பளவில், 187.5 கோடி ரூபாயிலும் பணிமனைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரு பணிமனைகளிலும் சராசரியாக, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.மெட்ரோ ரயில் பராமரிப்பு மற்றும் துாய்மை பணிக்காக இந்த பணிமனைக்குதான் செல்ல வேண்டும். மாதவரம், பூந்தமல்லி பணிமனைகள் நீண்ட துாரத்தில் இருப்பதால், ரயில் சேவை துரிதமாக கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், சோழிங்கநல்லுார், சிறுசேரி முக்கிய சந்திப்புகளாக உள்ளன. இங்கிருந்து மெட்ரோ ரயில்கள் புறப்படும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது பணிமனையை சோழிங்கநல்லுார் - சிறுசேரி இடையே அமைப்பது மிகவும் அவசியம். ஏற்கனவே சிறுசேரியில் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டோம். ஆனால், அங்கு ஒரே இடத்தில் போதிய நிலம் கிடைக்கவில்லை. எனவே, செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், 25 முதல் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய உள்ளோம். இதற்கான பணிகளை துவங்கி உள்ளோம். அரசின் தலைமை செயலர் வரை பேச்சு நடந்து வருகிறது. இரண்டு வாரங்களில் இடங்களை தேர்வு செய்து, தமிழக அரசு வாயிலாக கையகப்படுத்த உள்ளோம். மூன்றாவது பணிமனை அமைத்தால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை சீராக இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வசதிகள்?
புதிய பணிமனையில் ஒரே நேரத்தில், 15க்கும் மேற்பட்ட பாதைகளில், ரயில்களை நிறுத்தும் வசதி, பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிக்கு பிரத்யேக பாதைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தனி கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, சிறுசேரி - மாதவரம், சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட உள்ளன.