ரூ.12,000 லஞ்சம் வாங்கிய திருநீர்மலை வி.ஏ.ஓ., கைது
சென்னை: பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். சென்னை, தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் மேகலாதேவி. இவர், பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம் திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, 47, ஆய்வு செய்தார். அவரும், கிராம நிர்வாக உதவியாளர் அமுதாவும், மேகலாதேவியை தொடர்பு கொண்டு, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, லஞ்சமாக 15,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின், பேரம் பேசி 3,000 ரூபாய் குறைத்து 12,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். இது குறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், மேகலாதேவி புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மேகலாதேவியிடம் இருந்து சங்கீதா, 12,000 ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கியபோது கையும், களவுமாக நேற்று கைது செய்தனர்.