உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம் தீர்ப்பாயத்தில் திருவள்ளூர் கலெக்டர் தகவல்

விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம் தீர்ப்பாயத்தில் திருவள்ளூர் கலெக்டர் தகவல்

சென்னை, 'விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், திருவள்ளூர் கலெக்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில், 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த விளிஞ்சியம்பாக்கம் ஏரி, ஆக்கிரமிப்புகளால் பாதிக்கும் மேல் சுருங்கிவிட்டதாகவும், ஏரிக்குள் கழிவுநீர் விடுவதால் மாசடைந்துள்ளதாகவும், நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர் குழு உறுப்பினர்கள் விஜய் குல்கர்னி, பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் அடையாளம் காணப்பட்ட 234 ஆக்கிரமிப்புகளில், 30 வணிக நிறுவனங்கள், மூன்று குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கச் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் விவர அறிக்கையை திருவள்ளூர் கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 25ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ