ரூ.6 கோடி செலவில் நவீனமயமாகும் திருவொற்றியூர், எண்ணுார் சுடுகாடுகள்
திருவொற்றியூர்:திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாடில், நவீன எரிவாயு தகன மேடை வசதி உட்பட நான்கு சுடுகாடுகள், ஆறு கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி நடக்கிறது.திருவொற்றியூர் மண்டலத்தில், பட்டினத்தார் சுடுகாடு பழமையானது. இங்கு, இறந்தவரின் உடல் புதைத்தல் மற்றும் விறகு பயன்படுத்தி எரியூட்டும் முறை பயன்பாட்டில் இருந்தது. இதன் காரணமாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு வரப்படும்போது, எரியூட்டுவதற்காக காத்திருக்கும் சூழல் இருந்தது.இதற்கு தீர்வாக, 2011ம் ஆண்டு, திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாடில், 1.25 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தக ன மேடை வசதியுடன், சுடுகாடு புனரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது. தற்போதும், பயன்பாட்டில் உள்ளது.மக்கள் தொகை அதிகரிப்பால், சுடுகாடின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. அதன்படி, மாநகராட்சி சார்பில், பட்டினத்தார் சுடுகாடு வளாகத்தில், 1.50 கோடி ரூபாய் செலவில், மற்றொரு நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதேபோல், நேதாஜி நகர், பெரியகுப்பம், தாழங்குப்பம் சுடுகாடுகளில், தலா, 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகன மேடையுடன் கூடிய வளாகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.மொத்தம், ஆறு கோடி ரூபாய் செலவில், நான்கு எரிவாயு தகனமேடை வசதியுடன் கூடிய சுடுகாடு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்து விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என, மண்டல குழு தலைவர் தனியரசு கூறினார்.