| ADDED : பிப் 17, 2024 12:41 AM
தாம்பரம், தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 49. இவர், தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகத்தில், நேற்று ஒரு புகார் கொடுத்தார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 'சிட்டி பைனான்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தில், 25,000 ரூபாய் லோன் பெற்று, அதை முறைப்படி திரும்பி செலுத்திவிட்டேன். அந்த நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டது.இந்நிலையில், பல்வேறு மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண் மற்றும் பெண் நபர்கள், 'உங்கள் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை தரவில்லை என்றால், 15 நாட்களில் சிறை செல்ல வேண்டியிருக்கும்' என மிரட்டுகின்றனர்.சென்னை, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்தும், பல வங்கிகளின் வழக்கறிஞர்கள் பேசுவதாகவும் அழைப்பு வருகின்றன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இம்மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.